/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் திடீர் போர்க்கொடி ரகசிய கூட்டத்தில் முடிவு
/
அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் திடீர் போர்க்கொடி ரகசிய கூட்டத்தில் முடிவு
அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் திடீர் போர்க்கொடி ரகசிய கூட்டத்தில் முடிவு
அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும் பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் திடீர் போர்க்கொடி ரகசிய கூட்டத்தில் முடிவு
ADDED : ஜூன் 15, 2024 05:22 AM

புதுச்சேரி: தேர்தல் தோல்வி யால் அமைச்சரவையை மாற்றி அமைத்து, புதியவர்களுக்குஅமைச்சர் பதவி வழங்க வேண்டும் என,பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் ரகசிய கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அமைத்து கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்தித்தது.
என்.ஆர். காங்., 10, பா.ஜ., 6 எம்.எல்.ஏ.,கள் தேர்வாகி ஆட்சி அமைத்தனர். இதுதவிர, 3 சுயேச்சை எம்.எல்.ஏ.,கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ.,கள் ஆதரவும் பா.ஜ.வுக்கு உள்ளது. முதல்வர், சபாநாயகர், அமைச்சர் எம்.எல்.ஏ.,கள் என 22 பேர் உள்ளனர். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் களம் இறங்கினார்.
ஆனால் தேர்தலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியின் வேட்பாளரான நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். இது என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ., கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பா.ஜ., எம்.எல்.ஏ.,களான கல்யாணசுந்தரம் தலைமையில் அங்காளன், ஜான்குமார், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கர் காலாப்பட்டு அருகில் ஒஷன் ஸ்பிரே ஓட்டலில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பின்பு, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதிக்கு அழைப்பு விடுத்து ஓட்டலுக்கு வரவழைத்தனர்.
அங்கு, என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணியில் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் உள்துறை அமைச்சராக 3 ஆண்டுகள் பொறுப்பு வகித்தும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் முடிவால் பா.ஜ., கட்சியின் இமேஜ் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியில் உள்ள மற்ற எம்.எல்.ஏ.,களுக்கும் சுழற்சி முறையில் அமைச்சர் பதவியை வழங்க வேண்டும்.
அதுபோல் பா.ஜ.,வை ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.,களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க வேண்டும் என மாநில கட்சி தலைவர் செல்வகணபதியிடம் வலியுறுத்தினர்.
மேலும், வரும் சட்டசபை கூட்ட தொடருக்கு முன்னதாக அமைச்சர், வாரிய தலைவர்கள் பதவி களை வழங்க வேண்டும். பதவி வழங்க மறுத்தால் நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரில் அரசுக்கு எதிராக நாங்கள் கடுமையாக குரல் கொடுப்போம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி, அமைச்சர் பதவிகளை மாற்றி தருவது தொடர்பாக டில்லி சென்று கட்சி தலைமையிடம் பேசுவோம், அமைதியாக இருங்கள் என, சமாதானம் செய்தார்.
ஆனால், பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டும், வாரிய தலைவர் பதவிகளை ஓரிரு நாட்களில் பெற்று தர வேண்டும் என, கறாராக தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.
தேர்தல் தோல்வியால் பா.ஜ., கட்சிக்குள் கோஷ்டி பூசல் வெடித்துள்ள நிலையில், தற்போது பா.ஜ., மற்றும் ஆதரவு சுயேச்சைஎம்.எல்.ஏ.,களின் நெருக்கடியால் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
முக்கிய புள்ளிகள்முயற்சி வீண்
பா.ஜ., எம்.எல்.ஏ.,கள் ரகசிய கூட்டம் நடத்த இருக்கும் தகவல் பரவியவுடன் அக்கட்சி மற்றும் ஆட்சி வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. முக்கிய புள்ளிகள் பலர் எம்.எல்.ஏ.,களை தொடர்பு கொண்டு, கூட்டம் நடத்த வேண்டாம். கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என, தடுக்க முயற்சி செய்தனர். அதையும் மீறி எம்.எல்.ஏ.,கள் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.