/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி
/
புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி
ADDED : ஜூலை 24, 2024 06:20 AM
புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், விரைவில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான, பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. லோக்சபா தேர்தலையொட்டி, 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார்.
தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய, அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த ஜூன் 18ம் தேதி மாநில அரசின் திட்டக்குழு கூட்டம் கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமையில், தலைமை செயலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கு, 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால், மத்திய அரசின் அனுமதி பெற்றே, பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும். இதற்கான கோப்பு மத்திய அரசின் நிதி, உள்துறை அனுமதிக்காக, அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் பட்ஜெட்டுக்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்ய கால தாமதம் ஆனது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதல்வர் ரங்கசாமி போன் மூலம் தொடர்பு கொண்டு, பட்ஜெட் கோப்பிற்கு அனுமதி வழங்கும் படி கோரினார்.
இதையடுத்து மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து புதுச்சேரி சட்டசபையில், பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் 31ம் தேதி புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் என தெரிகிறது.