/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி உயில் மூலம் நிலம் அபகரித்த வழக்கில் சென்னை பெண் கைது
/
போலி உயில் மூலம் நிலம் அபகரித்த வழக்கில் சென்னை பெண் கைது
போலி உயில் மூலம் நிலம் அபகரித்த வழக்கில் சென்னை பெண் கைது
போலி உயில் மூலம் நிலம் அபகரித்த வழக்கில் சென்னை பெண் கைது
ADDED : ஆக 09, 2024 04:46 AM

புதுச்சேரி: போலி உயில் மூலம் நிலம் அபகரித்த வழக்கில் சென்னை பெண்ணை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலம் போலி ஆவணம் தயாரித்து விற்கப்பட்டது.சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிந்து 17 பேரை கைது செய்ததுடன், கோவில் நிலம் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்திற்கு பிறகு, பத்திர பதிவு துறையில் ஏராளமான உயில்கள் திருத்தி போலி பத்திரம் தயாரித்து உள்ளதாக புகார் எழுந்தது. சப்கலெக்டராக இருந்த கந்தசாமி, அனைத்து பத்திர பதிவு அலுவலகத்திலும் உள்ள உயில் விபரங்களை மறு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் உள்ள 5 பத்திர பதிவு அலுவலகத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையில், உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் கடந்த 1980ம் ஆண்டு முதல் 2001 ஆண்டு வரை பல உயில்கள் திருத்தி போலி பத்திரம் தயாரித்து நிலம் அபகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உழவர்கரை பத்திர பதிவு சப்ரிஜிஸ்டர் பாலமுருகன், சி.பி.சி.ஐ.டி., போலீசில் கடந்த டிச., மாதம் புகார் அளித்தார். அதில் அப்துல் சமீது, தண்டபாணி (எ) ஆறுமுகம், சுந்தரமூர்த்தி (எ) ரங்கநாதன் சீனிவாசன், மீரா கமலாகுமாரி, மீரா சுமதி, கோகிலாம்பாள் சாமிகண்ணு, ஜெயசேகரன் ஜெயமேரி, முனுசாமி தண்டயாயுதபாணி, பாலகிருஷ்ணன், தங்கமயில் ஆகியோரின் 8 உயில் ஆவணங்களில் கைரேகை மற்றும் கையொப்பம் புத்தகத்தில் திருத்தம் செய்து போலியான பத்திரம் தயாரித்து நிலங்கள் அபகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில், 8 உயில்களின் ஆவணங்களை கிழத்துவிட்டு, போலியான உயில் ஆவணங்களை ஒட்டி அதன் மூலம் பத்திரம் பதிவு நடந்ததை கண்டுபிடித்தனர்.
முதல் போலி உயிலை ஆய்வு செய்தபோது, சாரம் பகுதியில் உள்ள 3600 சதுரடி நிலத்திற்கு, கடந்த 1980ம் ஆண்டு கோட்டக்குப்பம் அப்துல் சமீத் நத்வீ என்பவர், கடலுார், மஞ்சக்குப்பம் சித்ரா என்பவர் மைனராக இருக்கும்போது அவரது பெயரில் உயில் எழுதி வைத்துள்ளதாக உயில் புத்தகத்தில் போலியான ஆவணம் ஒட்டி, அதன் மூலம் அந்த இடத்தை வேறு நபர்களுக்கு சித்ரா மூலம் பத்திரம் எழுதி விற்பனை செய்து கண்டுபிடித்தனர்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான குழுவினர், போலி உயில் மூலம் நிலம் விற்பனை செய்ய உதவிய சென்னை, மேடவாக்கம், பொன்னியம்மன் நகர், பாஸ்கர் மனைவி சித்ரா, 47; என்பவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என, போலீசார் தெரிவித்தனர்.