சித்தலம்பட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சித்தலம்பட்டு அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஜூன் 01, 2026 09:44 PM
புதுச்சேரி: சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992–94ம் ஆண்டுகளில் மேல்நிலை வகுப்புகள் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளின் 32 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு விழா திருக்கனுாரில் நடந்தது.
பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், தங்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளியின் ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் ஹரிஹரன், மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
விழாவில், பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களின் ஆசிரியர்களை மலர்துாவி, காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து, மாணவர்கள் தங்களது பழைய பள்ளிப் பருவ சுவாரசியமான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். சந்திப்பை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தப்பட்டு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், முன்னாள் மாணவர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடி, தங்களுக்குப் பாடம் கற்பித்த ஆசிரியர்களைக் கவுரவித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக, மறைந்த தங்களுடன் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
