/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
2 மணி நேர மழைக்கே வெள்ளக்காடான நகர வீதிகள்
/
2 மணி நேர மழைக்கே வெள்ளக்காடான நகர வீதிகள்
ADDED : ஆக 09, 2024 04:45 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரண்டு மணி நேரம் பெய்த மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், நகரத்து வீதிகள் தண்ணீரில் தத்தளித்தன. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
புதுச்சேரியில் நேற்று மாலை 6:45 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு, மழை பெய்ய துவங்கியது.
சில நிமிடங்களிலேயே மழை நீர் வெளியேற முடியாமல், 'புல்வார்டு' எனப்படும் நகரத்து வீதிகளில் குளம்போல தேங்கியது. இதனால், வீதிகள் வெள்ளக்காடாக மாறியது.
காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, புஸ்சி வீதி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதி, பாரதி வீதி, வெள்ளாழர் வீதி, நீடராஜப்பய்யர் வீதி, காந்தி வீதி என பிரதான வீதிகளும் வெள்ளத்துக்கு தப்பவில்லை. இரவு 8:45 மணி வரை 2 மணி நேரம் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வீதிகள் திணறின.
சின்ன வாய்க்கால் முழுதும் நிரம்பி சில வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது.
இன்ஜின் மூழ்கும் அளவிற்கு தேங்கிய தண்ணீரில் சிக்கி டூ வீலர்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் பழுதடைந்தன.