இடிந்து விழுந்த மதில் சுவரால் போக்குவரத்திற்கு இடையூறு
இடிந்து விழுந்த மதில் சுவரால் போக்குவரத்திற்கு இடையூறு
ADDED : மே 12, 2026 07:32 PM

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையைச் சுற்றிப் பாதுகாப்பு கருதி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கம்பளி சாமி கோவில் எதிரே சுப்பையா நகருக்குச் செல்லும் சாலையை ஒட்டியுள்ள தொழிற்பேட்டையின் மதில் சுவர், கடந்த சில வாரங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.
மதில் சுவர் இடிந்து விழுந்ததில் அதன் கட்டுமானக் கற்கள், சிமென்ட் காரைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் சுப்பையா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும்போது, இந்த இடிபாடுகள் தெரியாமல் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.
ஏற்கனவே மக்கள் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையை பொது வழியாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில் இடிந்த மதில் சுவரை சீரமைக்காவிடில் இதையும் பொது வழியாக பயன்படுத்திவிடுவர். எனவே அதிகாரிகள் உடனடியாக, சேதமடைந்த மதில் சுவரை சீரமைக்க வேண்டும்.
