புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலைத்துறை சார்பில் ஏழினி 2024 என்ற 'சோமயானம்' தலைப்பில் கடந்த 29ம் தேதி நாடகம் நடத்தப்பட்டது. அதில், பாரதத்தின் இருபெரும் காப்பியங்களில் ஒன்றான ராமாயணத்தை அவமதிக்கும் வகையில் கதையும், கதாபாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டது.
இது இந்து மதத்தின் நம்பிக்கையை அவமதிப்பு செய்யும் வகையில் உள்ளதால், நாடகத்தை அரங்கேற்றிய புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கலை துறையை கண்டித்து, அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் மாணவர்கள் அமைப்பு பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில், நாடகத்தின் எழுத்தாளரும் இயக்குனருமான எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவர் புஷ்பராஜ் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அதில், நடித்த சம்பந்தப்பட்ட நடிகர்கள், துறை தலைவர் சரவணன் வேலு மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாடகத்தை உருவாக்க அனுமதித்த பேராசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

