கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி குறைந்தது மாநில அளவில் 19வது இடம்
கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி குறைந்தது மாநில அளவில் 19வது இடம்
ADDED : மே 08, 2026 11:23 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உயர்ந்து வந்த பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு குறைந்து, மாநில அளவில் 19ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை, கடலுார் மாவட்டத்தில் 117 அரசுப்பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 101 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 248 பள்ளிகளில் இருந்து 14,919 மாணவர்கள், 14,478 மாணவியர்கள் என, மொத்தம் 29,840 பேர் எழுதினர். அவர்களில் 14,040 மாணவர்கள், 14,479 மாணவிகள் என, மொத்தம் 28,518 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.57 ஆகும். இதில், மாணவர்கள் 94.11, மாணவியர் 97.03 சதவீதமாகும். மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 93.23 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
கடலுார் மாவட்டம் கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக இருந்தது. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டதன் விளைவாக தேர்ச்சி சதவீதம் உயர்ந்தது, கடந்த 2023ம் ஆண்டு 92.04 சதவீதமாகவும், 2024ல் 94.36 சதவீதம் மற்றும் 2025ம் ஆண்டு 96.06 சதவீதமாக ஆண்டுக்காண்டு உயர்ந்து வந்தது. இந்த தேர்ச்சி சதவீதம் நடப்பு ஆண்டு, 95.57 சதவீதமாக குறைந்தது.
இதனால், 2023ம் ஆண்டு மாநில அளவில் 27ம் இடத்தில் இருந்த கடலுார் மாவட்டம், 2024ம் ஆண்டு 22வது இடத்திற்கும், கடந்தாண்டு 10 வது இடத்திற்கும் முன்னேறியது. ஆனால், இந்த ஆண்டு, தேர்ச்சி சதவீதம் குறைந்து, மீண்டும் 19 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
