/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியை கலக்கிய 'புஸ் புஸ்' வண்டி தெரியுமா?
/
புதுச்சேரியை கலக்கிய 'புஸ் புஸ்' வண்டி தெரியுமா?
ADDED : ஜூலை 28, 2024 07:09 AM

பிரெஞ்சு புரட்சிக்குப் பின், பிரெஞ்சியர் ஆட்சிக்குட்பட்டு இருந்த புதுச்சேரியில் எண்ணற்ற மாற்றங்கள் நிகழத் துவங்கின. கட்டை வண்டியை தாண்டி, பல வகையான வாகனங்களின் பயன்பாடு துவங்கியது.
குறிப்பாக, சாமானிய மக்கள் முதல், உயர் பதவி வகிப்பவர்கள் வரை ரிக் ஷாக்களை பயன்படுத்த துவங்கினர்.
இதில், முக்கியமான இடத்தை பெற்றிருந்தது புஸ் புஸ் வண்டி. புஸ் புஸ் என்பது பிரெஞ்சு சொல். 'தள்ளு' என்பது அதன் பொருள்.
முற்றிலும் இரும்பினால் செய்யப்பட்ட இந்த புஸ் புஸ் ரிக் ஷா வண்டியில் செல்ல பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வம் காட்டினர். கை ரிக் ஷாவை முன்னால் நின்று ஆட்கள் இழுத்து செல்ல வேண்டும். ஆனால், புஸ் புஸ் வண்டி அப்படியே தலைக்கீழ்.
பின்னால் இருந்து ஆட்கள் தள்ள வேண்டும். ரிக் ஷாவில் அமர்ந்து இருப்பவரிடம் தான் சுக்கான் இருக்கும். அவர் விரும்பிய இடத்திற்கு செல்ல அவரே சுக்கானை திருப்பி கொள்ள வேண்டும்.
புஸ் புஸ் வண்டிகளை தள்ள பார்வையற்றவர்களையும், பார்வை மங்கி போனவர்களையும் தான் அதிகமாக பயன்படுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் புஸ் புஸ் ரிக் ஷா தோன்றிய விதம் குறித்து, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் வாழ்ந்த செத்னா என்பவர் மும்பையில் இருந்து வெளி வந்த மதர் இந்தியா என்ற பத்திரிகையில் பதிவு செய்துள்ளார்.
விலை மாதுக்களுடன் இரவை கழிப்பதில் நேரத்தை செலவழிக்க நினைத்த ஒரு பிரெஞ்சு உல்லாச பேர் வழி கண்டுபிடித்தது தான் இந்த புஸ் புஸ் வண்டி என விவரித்துள்ளார்.
இந்த புஸ் புஸ் வண்டி தற்போது புதுச்சேரி அருங்காட்சியகத்தில் தஞ்சமடைந்துள்ளது. புதுச்சேரி அருங்காட்சியகம் சென்றால் புஸ் புஸ் ரிக் ஷா வண்டியை பார்க்கலாம்.