ADDED : மே 04, 2026 08:41 PM
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிப்பட்டனர்.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஊரணி பொங்கல் நடந்தது. தொடர்ந்து, படுகளம் நிகழ்ச்சி மற்றும் அம்மனுக்கு சாந்தகாப்பு அலகாரம், தீபராதனை நடந்தது. மாலை தீமிதி உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
தொடர்ந்து, இன்று (5ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை 6ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
