/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் திராவிட மாடல் பின்பற்றப்படுகிறது
/
புதுச்சேரியில் திராவிட மாடல் பின்பற்றப்படுகிறது
ADDED : ஆக 08, 2024 02:13 AM
புதுச்சேரி : தமிழகத்தின் திராவிட மாடல் புதுச்சேரியில் பின்பற்றப்படுகிறது என, அமைச்சர்களுடன் தி.மு.க., எம்.எல்.ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானிய கோரிக்கையின் மீதான விவாதம்;
சம்பத் எம்.எல்.ஏ., (தி.மு.க.,); தமிழக முதல்வர் ஸ்டாலின் வழியில் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை 1,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்து, திராவிட மாடல் அரசின் சாதனையை புதுச்சேரிக்கும் வழங்கிய முதல்வருக்கு நன்றி.
அமைச்சர் நமச்சிவாயம்: எல்லா திட்டத்திற்கும் முன்னோடி புதுச்சேரி தான். இந்தியாவிலேயே புதுச்சேரியில் தான் மகளிருக்கு 1,000 ரூபாய் திட்டம் அறிவித்து அதை முதலில் செயல்படுத்தியது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: தமிழகத்தில் தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அங்கு 1 கோடி பேருக்கு மேல் பயனடைந்து வருகின்றனர். ஆனால் புதுச்சேரியில் 13 ஆயிரம் பேருக்கு தான் முதலில் கொடுக்கப்பட்டது, அதன் பிறகு தான் 33 ஆயிரம் பேருக்கு உயர்த்தப்பட்டது.
அமைச்சர் நமச்சிவாயம்: தமிழகத்தில் எல்லோருக்கும் மகளிர் உதவித் தொகை கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை. முதலில் அறிவித்து முதலில் செயல்படுத்தியது புதுச்சேரி தான்.
செந்தில்குமார், தி.மு.க.,: தமிழகத்தை பார்த்து தான் புதுச்சேரியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதுபோன்று பல திட்டங்கள் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஆனால் பா.ஜ.,வினர் தான் தடுக்கின்றனர்.
நாஜிம் (தி,மு.க.,): தமிழகத்தின் திட்டங்களை தான் மற்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. மத்திய தணிக்கை அறிக்கையில் என்ன சொல்கிறது தெரியுமா. விவாதிக்க தயாரா...
அமைச்சர் நமச்சிவாயம்: இது திராவிட உருட்டு
அமைச்சர் லட்சுமிநாராயணன்: இந்தியாவில் முன்னோடி திட்டங்கள் எல்லாமே புதுச்சேரியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சென்டாக் பணம், கல் வீடுகளாக மாற்றும் திட்டம் என பல திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
செந்தில்குமார்(தி.மு.க.,): மத்திய அரசு பரிசோதனை செய்யும் கூடமாக புதுச்சேரி மாறிவிட்டது. சோதனை எலியாக புதுச்சேரியை மத்திய அரசு பார்க்கிறது.
பயன்படுத்தியும் வருகிறது. இதனால் எந்த பலனும் புதுச்சேரிக்கு இல்லை. ஆனால் தமிழகத்தினை திட்டங்களை இந்தியாவே உற்றுபார்த்து பின்பற்றுகிறது. அப்படிப்பட்ட திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
துணை சபாநாயகர் ராஜவேலு: திட்டங்களை யார் கொண்டு வந்தது என்று வாதம் செய்யுங்கள். விதண்டாவாதம் செய்ய வேணடாம்.
அமைச்சர் தேனீஜெயக்குமார்: மகளிருக்கு 1,000 ரூபாய் திட்டம் 7.5 சதவீதம் பேருக்கு கொடுக்கப்படுகிறது. இதுதவிர முதியோர், மாற்றுதிறனாளிகள், மீனவர், மகளிர் என மொத்தம் 2.25 லட்சம் பேர் பென்ஷன் தொகை பெறுகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் உதவி தொகை பெறுகின்றனர். இதுபோன்று எந்த மாநிலத்திலாவது செய்ய முடியுமா...
இவ்வாறு விவாதம் சட்டசபையில் அனல் பறந்தது.