ADDED : மே 31, 2026 10:33 PM
புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம், கே.ஆர்.பாளையத்தில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்ட 2 போதை நபர்களை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம், கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே வாலிபர் ஒருவர், குடிபோதையில் அவ்வழியாக செல்லும் பொது மக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டு வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அவர், கிளியனுாரைச் சேர்ந்த சுரேஷ், 35, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், கே.ஆர்.பாளையம் கடை வீதியில், குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விழுப்புரம், சின்ன நெற்குணத்தை சேர்ந்த வடிவேல், 43; என்பவரை திருக்கனுார் போலீசார் கைது செய்தனர்.
