/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடும் வெயில் காரணமாக ஏறி இறங்கிய ஓட்டுப்பதிவு
/
கடும் வெயில் காரணமாக ஏறி இறங்கிய ஓட்டுப்பதிவு
ADDED : ஏப் 20, 2024 05:40 AM
புதுச்சேரி, : கடும் வெயிலும் ஓட்டுப்பதிவு அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. புதுச்சேரியில் 79.69 சதவீதம், காரைக்கால்-75.65, மாகி-65.11, ஏனாம்-76.8 சதவீதம் ஓட்டு பதிவானது.
புதுச்சேரி லோக்சபா தொகுதி ஓட்டுப்பதிவு, நேற்று காலை, 7:00 மணிக்கு விறுவிறுப்புடன் துவங்கியது. வெயில் வந்து விடும் என்பதால், சீக்கிரமே ஓட்டுப்போட வாக்காளர்கள், வந்த வண்ணம் இருந்தனர். தேர்தல் துறையானது இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஓட்டு பதிவினை கணக்கிட்டு 9 மணி, 11 மணி, 1 மணி, 3 மணி, 5 மணி, 6 மணி என ஆறு கட்டங்களாக வெளியிட்டது.
காலை, 9:00 மணி நிலவரப்படி, 12.75 சதவீத ஓட்டுகள் பதிவானது. நெல்லித்தோப்பு தொகுதியில் 14.63 சதவீதம், தட்டாஞ்சாவடி-14.32, திருபுவனை-14.28,கதிர்காமம்-14.01 சதவீதம் அதிகபட்சமாக பதிவானது.
11:00 மணி நிலவரம்
ஓட்டு பதிவு காலை 11 மணிக்கு,28.10 சதவீதமானது. அதிகபட்சமாக நெல்லித்தோப்பில் 31.57, பாகூர் 30.87, லாஸ்பேட்டை 30.52 சதவீதம் பதிவானது. அதன் பின், கடுமையான வெயில் வாட்டியது. இதனால் நகர்புறம் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு வாக்காளர்கள் வர தயக்கம் காட்டினர்.
1:00 மணி நிலவரம்
44.95 சதவீத ஓட்டுகள் பதிவானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாகூர் தொகுதி வாக்காளர்கள் 51.36 சதவீத பேர் ஓட்டளித்தனர். அடுத்து இந்திரா நகர்-49.93, நெட்டப்பாக்கம்-49.79 சதவீதம் பேர் ஓட்டளித்து இருந்தனர். அதே நேரத்தில் மாகியில் குறைந்தபட்சமாக 39.65 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
3:00 மணி நிலவரம்
வெயில் காரணமாக, பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களே, மதியம் காணப்பட்டனர். இதனால், மூன்று மணி நிலவரப்படி 58.86 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்தது. பாகூர் தொகுதியில்-65.28, காலாப்பட்டு தொகுதியில் 64.34, நெட்டப்பாக்கம்-63.75 சதவீத பேர் ஓட்டளித்து இருந்தனர்.
5:00 மணியளவில்
மாலை 5 மணியளவில் 72.84 சதவீதமாக ஓட்டுப்பதிவு மீண்டும் அதிகரித்தது. பாகூர் தொகுதி ஓட்டு பதிவில் 83.25 சதவீதத்தை எட்டியது.
இறுதி ஓட்டு பதிவு
மாலை 6:00 மணிக்கு ஓட்டு பதிவு முடிந்ததும் டோக்கன் பெற்று வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இறுதியில் இரவு 8:00 மணி நிலவரப்படி புதுச்சேரியில் பிராந்தியத்தில், மொத்தமுள்ள 7,86,461 வாக்காளர்களில் 6,26,737 பேர் ஓட்டளித்தனர். 79.69 சதவீத ஓட்டு புதுச்சேரியில் பதிவாகி இருந்தது.
காரைக்காலில் மொத்தமுள்ள 1,66,792 வாக்காளர்களில், 1,26,177 பேர் ஓட்டளித்து இருந்தனர். காரைக்காலில் 75.65 சதவீத பதிவாகி இருந்தது.
மாகியில் மொத்தமுள்ள 31,038 பேரில் 20,210 பேர் மட்டுமே ஓட்டளித்ததால் ஓட்டு சதவீதம் 65.11 ஆக குறைந்தது. ஏனாமில் 39,408 வாக்காளர்களில் 30,264 பேர் ஓட்டளித்ததால் ஓட்டு சதவீதம் 76.8 சதவீதமாக பதிவானது.

