/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் ஏரியில் ஆக்கிரமிப்பு: நீர் வளம் பாதிப்பு
/
பாகூர் ஏரியில் ஆக்கிரமிப்பு: நீர் வளம் பாதிப்பு
ADDED : செப் 15, 2024 06:52 AM

பாகூர்: பாகூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வளத்தை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரியில், 193.50 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இதன் மூலம், ஏரியை சுற்றியுள்ள 4,300 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருவது மட்டுமின்றி, நிலத்தடி நீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த ஏரி முறையான பராமரிப்பின்றி உள்ள நிலையில், ஏரியின் மேற்கே தமிழக பகுதியான உள்ளேரிப்பட்டு, கரைமேடு, விநாயகபுரம் கரையொட்டிய நீர்பிடிப்பு பகுதியில் ஏக்கர் கணக்கில் ஏரியை உழுது, பயிர் செய்து வருவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சாகுபடி பரப்பளவு ஒவ்வொரு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்வதால், ஒரு கட்டத்தில் பாகூர் ஏரி முழுதும் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் சென்று விடும் அபாயம் உள்ளது.
ஏரியில் பயிரிடப்படும் நெல் பயிருக்கு, இடு பொருட்களாக ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதால், மீன், நண்டு, நத்தை மற்றும் அதனை இரையாக உட்கொள்ளும் பறவை இனங்கள் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
சித்திரை பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஏர் உழுது பயிரிடுவது தடுக்கப்பட வேண்டும்.
இது குறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,''பாகூர் ஏரியில் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள பட்டாக்களை ரத்து செய்திடகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட புதுச்சேரி மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து பாகூர் ஏரியை பாதுகாத்திட வேண்டும் என்றார்''.