/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்
/
காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்
ADDED : மே 23, 2024 05:34 AM

புதுச்சேரி : புதுச்சேரி காந்தி வீதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.
புதுச்சேரி நகர வீதிகள் அனைத்திலும் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் வைத்துள்ளனர் .இவர்கள் சாலையோரத்தை ஆக்கிரமித்து பொருட்களை வெளியில் வைப்பதாக புதுச்சேரி நகராட்சிக்கு ஏராளமான புகார்கள் சென்றது.
இதையடுத்து, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையிலான அதிகாரிகள் கடந்த 20ம் தேதி காந்தி வீதியில் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சாலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை எடுத்து உள்ளே வைக்க வேண்டும், சாலையில் பல அடி துாரத்திற்கு ஆக்கிரமித்து அமைத்துள்ள ெஷட் அமைப்புகளை அகற்ற வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் நேற்று காலை காந்தி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர். கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பழக்கடை, இளநீர் கடை, தள்ளு வண்டி ஓட்டல்கள், பாஸ்ட்புட் கடைகள், டீ கடைகள் நடத்துபவர்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்து செய்து பொருட்கள் வைத்திருந்தனர். எச்சரிக்கை விடுத்து 2 நாட்கள் கழித்தும் சாலையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்களை, நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
பழக்கடைக்கு சீல்
காந்தி வீதி அய்யங்கார் பேக்கரி அருகில் உள்ள சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த பழக்கடையை அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர். சண்டே மார்க்கெட்டில் கடை நடத்தும் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். வியாபாரம் முடித்த பின் இரவு பொருட்களை எடுத்து செல்லும் வெளிமாநில வியாபாரிகள், வியாபாரத்திற்கு பயன்படுத்தும் மேஜை, நாற்காலி, இரும்பு கம்பி உள்ளிட்ட பொருட்களை மூட்டை கட்டி, சாலையோரம் வைத்து விட்டு செல்கின்றனர்.
அத்தகைய பொருட்களையும் நகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். வியாபாரிகள் நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேசமயம், நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். அனைத்து வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூறும்போது, 'ஒவ்வொரு வாரமும் ஒரு வீதியை தேர்வு செய்து ஆய்வு செய்கிறோம். ஆய்வின்போது ஆக்கிரமிப்பு இருந்தால், கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளாவிட்டால் கடைக்கு சீல் வைப்பது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.

