புதுச்சேரியில் தனித்து விடப்பட்ட ஈரோடு சிறுவன் மீட்பு அவரது பெற்றோர் குறித்து விசாரணை
புதுச்சேரியில் தனித்து விடப்பட்ட ஈரோடு சிறுவன் மீட்பு அவரது பெற்றோர் குறித்து விசாரணை
ADDED : ஜூலை 24, 2026 08:53 PM
பாகூர்: புதுச்சேரி எல்லையில் தனித்து விடப்பட்ட 6 வயது சிறுவனை, குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு, அவரது பெற்றோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி – கடலுார் சாலை கன்னியக்கோவில் பகுதியில் கடந்த 21ம் தேதி, 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் சுற்றித்திரிந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் அச்சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர். அவர், தனது தந்தையுடன் வந்ததாகவும், அவர் தன்னை விட்டு விட்டு சென்று சென்று விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, போலீசார், குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற நலக்குழுவினர், சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், தனது பெயர் கருப்பு என்றும், தான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும், தனது தந்தையுடன் வந்த நிலையில், அவர் தன்னை விட்டு எங்கு சென்றார் என தெரிவில்லை என, தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுவனை மீட்ட குழந்தைகள் நலக்குழுவினர், அவரை, அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். தொடர்ந்து, அச்சிறுவனின் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சிறுவனின் பெற்றோர் அல்லது உறவினர் பற்றிய தகவல் தெரிந்தால், உடனடியாக புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் உதவி எண் 1098 அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு குழந்தைகள் நலக்குழு தலைவர் தலைவர் அன்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
