இறால் விலை குறைவு, தீவனம் விலை அதிகரிப்பு தள்ளாட்டத்தில் பண்ணை உரிமையாளர்கள்
இறால் விலை குறைவு, தீவனம் விலை அதிகரிப்பு தள்ளாட்டத்தில் பண்ணை உரிமையாளர்கள்
ADDED : மே 23, 2026 07:23 PM
கடலுார்: மாவட்டத்தில் இறால் கொள்முதல் விலை குறைந்து, தீவனம் விலை உயர்ந்துள்ளதால், பண்ணை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில், இந்திய இறக்குமதி பொருளுக்கு 50 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளதால் இறால் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தியாவின் கடல் உணவு பொருட்களின் முக்கிய ஏற்றுமதி பொருளாக பதப்படுத்தப்பட்ட இறால் தொடர்ந்து இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்களின் முக்கிய இறக்குமதியாளர்களாக உள்ளனர்.
கடந்த காலங்களில் இந்தியா 63,969.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 17,35,286 மெட்ரிக் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்தது.
இந்திய கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சவால்களை சந்தித்த போதிலும், கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியானது, தேவையின் அடிப்படையில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்தி, 2023–24ம் ஆண்டில் பதப்படுத்தப்பட்ட இறால்களின் மொத்த ஏற்றுமதி 7,16,004 மெட்ரிக் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் மட்டும் இந்திய இறக்குதி பொருட்களுக்கு, 50 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்கா வியாபாரிகள் இறால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் வளர்ப்பு இறால் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. இந்த பிரச்னை இன்னும் எவ்வளவு நாட்கள் தொடரும் என தெரியவில்லை. இந்நிலையில் 10 கிராம் எடையுள்ள இறால் மார்க்கெட்டில் 260 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது இந்த இறால் கொள்முதல் விலை 240 மற்றும் 230 ரூபாயாக குறைந்துள்ளது. இது ஒரு புறமிருக்க குறைந்து வந்த தீவனம் விலை தற்போது கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது ஒரு கிலோ 100 ரூபாயாக உள்ளது.
இந்த நிலையில் இறால் வளர்ப்போர்களுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பண்ணை வைத்திருப்போர் தெரிவிக்கின்றனர்.
