/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண் ஆட்டோ டிரைவர் சாலை விபத்தில் பலி
/
பெண் ஆட்டோ டிரைவர் சாலை விபத்தில் பலி
ADDED : ஆக 18, 2024 04:33 AM
பாகூர் : சாலை விபத்தில் பெண் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, அமைதி நகரை சேர்ந்தவர் பன்னீர் மனைவி முனியம்மாள், 34; ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மதியம் சவாரி ஏற்றிக்கொண்டு, தவளக்குப்பம் பகுதிக்கு வந்தார். பின், பயணிகளை இறக்கி விட்டு, மாலை 4:30 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டு முத்தியால்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி - கடலுார் சாலை, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு மேம்பாலத்தில் பின்னால் வந்த ஸ்கோடா கார் முந்தி சென்றபோது ஆட்டோவின் பக்கவாட்டில் உரசியது.
நிலை தடுமாறிய ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு கட்டையில் மோதி சாலையில் கவிழ்ந்து உருண்டது. அந்த நேரம், எதிரே வந்த அசோக் லைலேண்ட் தோஸ்த் லோடு வாகனம் ஆட்டோ மீது மோதியது.
இதில், முனியம்மாள் படுகாயமடைந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்கள் உதவியுடன் முனியம்மாளை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.