தொழிற்சாலையில் 2வது நாளாக தீயைணைக்கும் பணி தொடர்கிறது
தொழிற்சாலையில் 2வது நாளாக தீயைணைக்கும் பணி தொடர்கிறது
ADDED : ஜூலை 14, 2026 11:23 PM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே நித்யா பேக்கேஜிங் தொழிற்சாலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., கோகுலகிருஷ்ணன். இவருக்கு திருக்காஞ்சி–ஒதியம்பட்டு சாலையில் நித்யா பேக்கேஜிங் என்ற காகித அட்டை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நான்கு பெரிய ஷட்டுகள் உள்ளது. அதில் தற்போது 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய குடோன் அமைத்து, அதன் உள்ளே புதியதாக தயாரிக்கும் அட்டை பெட்டிகள் மற்றும் ரீல்கள் சேமித்து வைத்த்திருந்தனர்.
இந்த குடோனில் நேற்று முன் தினம் இரவு 7:30 மணியளவில் திடீர் என தீ பிடித்து குடோன் முழுவதும் தீ பரவியது. ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் வில்லியனுார், கோரிமேடு, திருபுவனை, சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மற்ற குடோன் பகுதியில் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டு தடுத்தனர். தொடர்ந்து நேற்று காலை முதல் கம்பெனி ஊழியர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணியளவில் மீண்டும் அதே குடோனில் தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கியதால், மீண்டும் வில்லியனுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு வரையில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தினால் தொடர்ந்து அதிக அளவில் புகை வெளியேறியதால் மாணவிகள் பாதிக்கபடுவார்கள் என்பதால் அருகே உள்ள குளுனி மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் நேற்று விடுமுறை அளித்தது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக குடோனில் இருந்த அட்டைகள் தீ எரிந்து கொண்டிருப்பதால் சேதமதிப்பு கணக்கிட முடியாமல் உள்ளனர். மேலும் தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
