/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை மண்டல மேலாண் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி மீனவர்கள் மனு
/
கடற்கரை மண்டல மேலாண் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி மீனவர்கள் மனு
கடற்கரை மண்டல மேலாண் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி மீனவர்கள் மனு
கடற்கரை மண்டல மேலாண் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி மீனவர்கள் மனு
ADDED : மே 15, 2024 11:46 PM

புதுச்சேரி: வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என, அனைத்து மீனவர் கிராம பஞ்சாயத்தார், அனைத்து மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பு நிர்வாகிகள் கலெக்டர் குலோத்துங்கனிடம் அளித்துள்ள மனு;
புதுச்சேரி அரசினால் வரைவு கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைப்படத்திற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வரும் 22ம் தேதி கம்பன் கலையரங்கில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை மண்டல மேலாண் திட்ட வரைப்படத்தில் வழிகாட்டுதல்களை பின்பற்றி தயார் செய்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள இந்த திட்ட அறிக்கையில் பல விஷயங்கள் விடுபட்டுள்ளது.
குறிப்பாக, கடலில் 12 கடல் மைல் துாரம் வரையில் மீன்பிடி தொழில் செய்யும் இடங்கள் தெளிவாக வரையறுத்து பதிவு செய்யவில்லை. மீன்பிடி, மீன் இனப்பெருக்கும் இடங்கள் குறிப்பிடப்படவில்லை. மீனவர்களுக்கான நீண்டகால குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மீனவர் கிராமங்களின் கடற்கரை பகுதிகள் முழுதும் மீனவர்களின் பயன்பாட்டிற்கான பகுதி என்று குறிப்பிடவில்லை. புயல் பாதுகாப்பு கூடங்கள் இடம் பெறவில்லை. இதேபோல் எழுத்து பூர்வமான திட்டகளும் இடம் பெறவில்லை.
மீனவ சமுதாயத்தின் பொது உடமைகளை சரிவர காண்பிக்கவில்லை. மீன் காய வைக்கும் மேடை, வலைபின்னும் கூடம் காட்டப்படவில்லை. இந்த வரைவுபடம் விதிமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்படவில்லை.
எனவே மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும். முறையாக வரைபடம் தயாரித்த பிறகு கருத்து கேட்பு கூட்ட அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.