/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன்பிடி தடைக்கால நிவாரணம்... உயர்த்தப்படுமா? 18 ஆயிரம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
/
மீன்பிடி தடைக்கால நிவாரணம்... உயர்த்தப்படுமா? 18 ஆயிரம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
மீன்பிடி தடைக்கால நிவாரணம்... உயர்த்தப்படுமா? 18 ஆயிரம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
மீன்பிடி தடைக்கால நிவாரணம்... உயர்த்தப்படுமா? 18 ஆயிரம் மீனவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 01, 2024 01:10 AM
புதுச்சேரி, : தமிழகத்தினை பின்பற்றி புதுச்சேரியிலும் மீன்பிடி தடைக் காலத்திற்கான நிவாரணம் உயர்த்தப்படுமா என, மீனவர்கள்எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடல் மீன்வளத்தை பேணி காப்பதற்காக 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாட்களில், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக புதுச்சேரி அரசு 6,500 ரூபாய் நிவாரணம் வழங்கி வருகிறது.
இதன் மூலம் மாநிலத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள 18 ஆயிரம் மீனவர்கள் ஆண்டுதோறும் பயனடைந்து வருகின்றனர். இதற்காக ஆண்டிற்கு பல கோடி ரூபாய் அரசு செலவிட்டு வருகிறது. இந்த நிவாரணம் மீனவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
அண்டை மாநிலமான தமிழகத்திலும் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மீனவர்களுக்கான தடைக்கால நிவாரணம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, தமிழக அரசாணை பிறப்பித்து கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இது தமிழக மீனவர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் இந்த அறிவிப்பு புதுச்சேரி மீனவர்கள் மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் எந்த ஒரு நலத்திட்டத்திலும் புதுச்சேரி மாநிலம் எப்போதுமே முன்னோடி மாநிலமாக இருக்கும்.
புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு மீனவர் திட்டமும் மற்ற மாநில மீனவர்களை ஒருகனம் பொறாமைப்பட வைக்கும் அளவிற்கு இருக்கும்.
தற்போது பிற மாநில மீனவர்களை பார்த்து புதுச்சேரி மீனவர்கள் பொறாமைப்பட வைக்கும் அள விற்கு தடைக்கால நிவாரணம் மாறிவிட்டது.
தமிழகத்தை ஒப்பிடும் போது, மீன்பிடி நிவாரணம் புதுச்சேரியில் 1,500 ரூபாய் குறைந்து உள்ளதால், மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 5 ஆயிரம் ரூபாயாக தடைக்கால நிவாரணம் இருக்குபோதே புதுச்சேரி அரசு 6,500 ரூபாயாக தடைக்கால நிவாரணத்தை வாரி வழங்கியது.
தற்போது தமிழகம் 8 ஆயிரம் ரூபாயாக நிவாரண நிதியை உயர்த்தியுள்ள சூழ்நிலையில் அதை காட்டிலும் உயர்த்தி கொடுத்தால் தான் அது புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமையாக இருக்கும்.
ஆகவே, புதுச்சேரி அரசு மீனவர்களுக்கான தடைக்கால நிவாரண நிதியை 6,500 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்துள்ள 18 ஆயிரம் மீனவர்கள், அரசின் அறிவிப்புக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்க வேண்டும்.