/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோர்காடு கோவில் நில மோசடி வழக்கு முன்னாள் ராணுவ வீரர் கைது
/
கோர்காடு கோவில் நில மோசடி வழக்கு முன்னாள் ராணுவ வீரர் கைது
கோர்காடு கோவில் நில மோசடி வழக்கு முன்னாள் ராணுவ வீரர் கைது
கோர்காடு கோவில் நில மோசடி வழக்கு முன்னாள் ராணுவ வீரர் கைது
ADDED : ஜூலை 15, 2024 02:13 AM
புதுச்சேரி: கோர்காடு பாலசுந்தர விநாயகர்கோவில் நில மோசடி வழக்கில், முன்னாள் ராணுவ வீரரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் அருகில் உள்ள கோர்காடு கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பாலசுந்தர விநாயகர் கோவிலுக்கு ரூ. 4 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த 2008ம் ஆண்டு பட்டா கோரி சிலர் விண்ணப்பித்தனர்.
அப்போதைய செட்டில்மெண்ட் அதிகாரி தர மறுத்தார். கடந்த 2011ம் ஆண்டு 2வது முறையிட்டபோது பட்டா வழங்கப்படவில்லை.
கடந்த 2021ம் ஆண்டு செட்டில்மெண்ட் அதிகாரியாக இருந்த பாலாஜி, கோவில் நிலத்திற்கு தனி நபர் பெயரில் பட்டா வழங்க ஆணையிட்டார். அதன்பின்பு பதவி உயர்வு பெற்ற மீன்வளத்துறை இயக்குநராக சென்று விட்டார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், விழுப்புரம் நாகப்பட்டினம் சாலை பணிக்காக, கோர்காடு பாலசுந்தர விநாயகர் கோவில் நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி, இழப்பீடு தொகை ரூ. 70 லட்சம் நிர்ணயித்தது. இழப்பீட்டு தொகையை தங்களுக்கு வழங்க கோரி, லாஸ்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அப்போது, கோவில் நிலத்திற்கு போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற முயற்சிப்பதாக நில அளவை துறை இயக்குநர் செந்தில்குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., மோகன்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
பட்டா வழங்க உத்தரவிட்ட செட்டில்மெண்ட் அதிகாரி பாலாஜி, லாஸ்பேட்டை நாவற்குளம், பொதிகை நகர், முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, தட்சிணாமூர்த்தி மனைவி ஹேமலதா (எ) நந்தினி, சுந்தராம்பாள், லாஸ்பேட்டையைச் சேர்ந்த மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரி அசிஸ்டென்ட் ராமமூர்த்திஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
செட்டில்மென்ட் அதிகாரியாக பணியாற்றிய பாலாஜி, 44; பல் மருத்துவ கல்லுாரி அசிஸ்டென்ட் ராமமூர்த்தி, 57;ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தனர்.
கோவில் நிலத்தை தனி நபர்கள் பெயரில் பட்டா மாற்ற ஆணை பெற்றவிவகாரத்தில், லதாவின் கணவரான முன்னாள் ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி, 65; முக்கிய பங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோசடி வழக்கில் கிருஷ்ணமூர்த்தி சேர்க்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
சேலம் தனியார் விடுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தியை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு அதிரடிப்படை சப்இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையிலான குழுவினர் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.