எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய மாஜி., அமைச்சர் சண்முகம் முடிவு
எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய மாஜி., அமைச்சர் சண்முகம் முடிவு
ADDED : மே 05, 2026 09:22 PM
திண்டிவனம்: அ.தி.மு.க., ராஜய்சபா எம்.பி.,யாக உள்ள சண்முகம், மயிலம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றதால், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள சண்முகம், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு 30,041 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதற்கிடையே ஒரே சமயத்தில் எம்..பி.,யாகவும், எம்.எல்.ஏ.,வாகவும் தொடர முடியாது என சட்டத்தில் உள்ளது. இதனால், ராஜ்யசபா எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., பதவியில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மூன்றாண்டு காலம் உள்ளது. அதே சமயத்தில் எம்.எல்.ஏ., பதவி 5 ஆண்டுகள் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சண்முகம், எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக தொடர்வார் என்றும், அவர் மாநில அரசியலில்தான் தீவிரம் காட்டுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்திருந்தால் சண்முகத்திற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது அ.தி.மு.க.,எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சண்முகம் தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக சமூக வலைதளத்தில் நேற்று செய்தி பரவியது.
இதுகுறித்து மாஜி அமைச்சர் சண்முகம் தரப்பில் கேட்ட போது, ‘ராஜ்யசபா எம்.பி.,பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், லோக்சபா சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும். அப்படி செய்வதற்கு இன்னும் நாட்கள் உள்ளது. ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு முறையாக தெரிவிக்கப்படும்’ என தெரிவித்தார்.
