/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டியது
/
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டியது
ADDED : செப் 07, 2024 06:57 AM

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலைகள், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை களை கட்டி உள்ளது.
நாடு முழுதும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை, இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பே, கொசக்கடை வீதி, சாரம், லாஸ்பேட்டை, ஜீவா காலனி, முத்தியால்பேட்டை மார்க்கெட், முதலியார்பேட்டை மார்க்கெட், பெரிய மார்க்கெட், பழைய உழவர் சந்தை, நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள் குவிந்து விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று காலை முதல் விற்பனை சூடு பிடிக்க துவங்கியது. இதில் களிமண்ணாலான சிலைகள், தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய காகிதக்கூழ் மூலம் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதிகபட்சமாக, 12 அடி வரை விற்பனை செய்யப்படுகின்றன.
களி மண்ணால் செய்யப்பட்ட சிறு விநாயகர் சிலை ரூ.60 முதல் ரூ.300 விற்பனைக்கு விற்கப்படுகிறது. மேலும், ஒன்றரை அடி சிலை ரூ.100 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது. 5 அடி காகித விநாயகர் சிலை அதிகபட்சமாக, ரூ.6 ஆயிரத்திற்கும், 12 அடி விநாயகர் சிலை ரூ.16 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, வண்ணக்குடைகள், ரூ.10 முதல் ரூ.150 விற்பனை செய்யப்படுகிறது.
பூக்கள் விலை கிடுகிடு
பூக்கள் விலை பன் மடங்கு உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம், மல்லி, 1 கிலோ, ரூ.300,க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.1,000க்கு விற்பனையானது.
அதேபோல ரூ.200க்கு விற்ற, சாமந்தி ரூ.240,க்கும், 160,க்கு விற்ற சாக்லேட் ரோஸ், 400,க்கும் விற்பனையானது. 80,க்கு விற்ற பன்னீர் ரோஸ், ரூ.200,க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், பொரி கடலை, அவல், எருக்கம்பூ, அருகம்புல், வாழை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.