ADDED : ஜூலை 18, 2026 07:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி, சாரதா கங்காதரன் கல்லுாரியில் 18-வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விழாவை கல்லுாரியின் தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். துணைத் தலைவர் பழனிராஜா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாபு விழா அறிக்கை வாசித்தார்.
விழாவில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிரகாஷ் பாபு, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் வென்ற 13 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் 2021, 2022, 2023, 2024 ஆகிய கல்வி ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற 1,200க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், ‘கல்வி அறிவு வறுமையை ஒழித்து, ஒடுக்கு முறையை தகர்த்து, உலகளாவிய சமத்துவத்தை நிலை நிறுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் விக் ஷித் பாரத் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், பட்டம் பெற்ற மாணவர்கள், ‘பிரச்னைகளைப் பார்க்கும் பார்வையாளராக இல்லாமல் தீர்வு காண்பவர்களாக இருக்க வேண்டும்’ என்றார்.
பட்டங்களைப் பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
