/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெளிநாடு சென்ற கணவன் மாயம்: மனைவி போலீசில் புகார்
/
வெளிநாடு சென்ற கணவன் மாயம்: மனைவி போலீசில் புகார்
ADDED : மார் 01, 2025 04:06 AM
காரைக்கால் : சிங்கப்பூர் சென்ற கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியை சேர்ந்தவர் நடேசன், 48. இவரது மனைவி கல்யாணி. நடேசன், கடந்த 15 ஆண்டுகளாக, சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.
அவ்வப்போது, ஊருக்கு வந்து செல்வார். நடேசன் கடந்த ஜனவரி 28ம் தேதி, மனைவியை மொபைல் போனில் தொடர்புக்கொண்டு, கடன் பணத்தை கொடுப்பதற்காக ரூ. 1 லட்சம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார். பின், கல்யாணி ஏஜென்ட் ஒருவர் மூலம், பணத்தை அனுப்பியுள்ளார்.
அதன் பிறகு, கடந்த பிப்., 3ம் தேதி, கல்யாணி தொடர்பு கொண்டபோது, அவர் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டதாக, அவர் பணியாற்றிய நிறுவனத்தில் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த கல்யாணி, காரைக்காலில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் விசாரித்தபோது, நடேசன் வரவில்லை என, தெரிவித்துள்ளனர். அவரை, மொபைல் போனில் தொடர்புகொள்ள முடியவில்லை.
சிங்கப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் விசாரித்தபோது, அங்கு ஏலச்சீட்டு போட்டதில், நடேசனுக்கு கடன் அதிகமாகி, மன வேதனையில் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதன் பிறகு, பல இடங்களில் கல்யாணி விசாரித்தும், நடேசன் கிடைக்கவில்லை. அவர் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.
இதனால், நேற்று முன்தினம் கோட்டுச்சேரி காவல் நிலையத்தில், கணவரை காணவில்லை என, கல்யாணி புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.