/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழிபோக்கர்கள், கால்நடைகளின் தாகம் தீர்த்த தண்ணீர் தொட்டி அந்த நாள் ஞாபகம்...
/
வழிபோக்கர்கள், கால்நடைகளின் தாகம் தீர்த்த தண்ணீர் தொட்டி அந்த நாள் ஞாபகம்...
வழிபோக்கர்கள், கால்நடைகளின் தாகம் தீர்த்த தண்ணீர் தொட்டி அந்த நாள் ஞாபகம்...
வழிபோக்கர்கள், கால்நடைகளின் தாகம் தீர்த்த தண்ணீர் தொட்டி அந்த நாள் ஞாபகம்...
ADDED : ஆக 25, 2024 05:41 AM

புதுச்சேரி அஜந்தா சிக்னல் அன்சாரி துரைசாமி சிலை எதிரே சாலையோர பூங்காவில் குழல் ஊதும் பாலகிருஷ்ணர் சிலை ஒன்று இருப்பதை சிக்னலில் சிறிது நேரம் நிற்கும்போது பார்த்து இருக்கலாம்.
அது என்ன என்று தெரியாமலும் பலர் கடந்து சென்று இருக்கலாம்.
அது வெறும் சாலையோர பூங்கா சிலை மட்டும் அல்ல. அந்த காலத்தில் உயிரினங்களின் தாகம் தீர்த்த தண்ணீர் தொட்டி. இப்போதைய வழக்கத்தில் சொன்னால் தண்ணீர் பந்தல். போக்குவரத்து வசதி இல்லாத பிரெஞ்சு ஆட்சி காலத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது எளிதன்று.
வசதி உள்ளவர்கள் குதிரை வண்டி, கட்டை வண்டியில் தான் செல்வர்கள். மற்றவர்கள் நடந்தே தான் செல்ல வேண்டும். அப்படி நெடுந்துாரம் பயணம் செல்லும் வழிபோக்கர்கள், அவர்களது கால்நடைகள், சுற்றி திரியும் கால்நடைகள் தாகம் தீர்த்து கொள்ள புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகளை கருணை உள்ளம் கொண்டவர்கள் ஆங்காங்கே அமைத்து கொடுத்தனர்.
அதில், ஒன்று தான் இந்த அழகிய குழல் ஊதும் பாலகிருஷ்ணர் சிலையுடன் கூடிய தண்ணீர் தொட்டி. இந்த தண்ணீர் தொட்டி 1927ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி பழைய மதராஸ் வாயிலான வடக்கு புல்வார் பகுதியான தற்போதைய இடத்தில் வீரராகவே வடிவேல் கிராமமணி என்பவர் அமைத்து கொடுத்தார்.
நீண்ட துாரம் பயணம் மேற்கொண்ட வழிபோக்கர்கள் தங்களுடைய கால்நடைகளுடன் வந்து இங்கு தங்கினர். தாங்களும், தங்களுடைய கால்நடைகளும் தாகம் தணித்த பிறகு, உள்ளம் உருக நன்றி தெரிவித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் புறப்பட்டு சென்றுள்ளனர்.
20ம் நுாற்றாண்டின் முற்பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நகரின் தெருமுனைகளின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குழாய்களான கான்கள் அமைக்கப்பட்ட பிறகு இந்த தண்ணீர் தொட்டி செயல் இழந்தது.
அடுத்து 1999 ஆண்டு இது, சாலையோரம் பூங்காவாக மாற்றப்பட்டபோதும், தாகம் தணித்த தண்ணீர் தொட்டி, செயற்கை நீருற்றாக மாற்றப்பட்டது. இப்போது தண்ணீர் தொட்டியில் சொட்டு தண்ணீர் இல்லை. பொலிவு இழந்து, யாருடைய தாகத்தையும் தணிக்காமல் பாலகிருஷ்ணர் மட்டுமே தனியாக குழல் ஊதிக்கொண்டு பழைய நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டிருக்கின்றார்.

