மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 29 புகார்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 29 புகார்களுக்கு உடனடி தீர்வு
ADDED : மே 09, 2026 08:31 PM
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ்துறை சார்பில் மாநிலம் முழுதும் நேற்று நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பொதுமக்கள் அளித்த 36 புகார்களில், 29 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நேற்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உள்ளிட்ட அனைத்துப் பிராந்தியங்களிலும் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. பாகூர் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் பொது மக்களிடம் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர்.
தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்தில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., வம்சிதா ரெட்டி ஆகியோரும், சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., ராகவ், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் நிலையங்களில், போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, பெரியகடை போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., யாரகாட்டி குறைகளை கேட்டறிந்தனர்.
இதேபோல், காரைக்காலில் எஸ்.பி., டேனியல் ராஜ், திருநள்ளார் போலீஸ் நிலையத்தில் சரக இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தனர். நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., சுப்ரமணியன், ஏனாம் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி,.க்கள்., கொய்யே சிட்டி ராஜூ, வரதராஜன், மாகேவில் இன்ஸ்பெக்டர் அனில்குமார் ஆகியோர், பொதுமக்களின் குறைகளை கேட்டனர்.
முகாம்களில், மொத்தம் 19 பெண்கள் உட்பட 162 பேர் மனுக்களை அளித்தனர். இதில் அளிக்கப்பட்ட 36 புகார்களில், 29 புகார்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அந்தந்த நிலையப் பொறுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
