/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபையில் தி.மு.க., - காங்., வெளிநடப்பு
/
சட்டசபையில் தி.மு.க., - காங்., வெளிநடப்பு
ADDED : ஆக 01, 2024 06:28 AM

புதுச்சேரி: கவர்னர் உரையாற்றி கொண்டிருக்கும்போது, தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர், கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையுடன் நேற்று துவங்கியது. கவர்னர் ராதாகிருஷ்ணன் உரையாற்றியபோது, மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டிப்பதாக கூறி, எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியாகராஜன், காங்., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோர் வெளி நடப்பு செய்தனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:
புதுச்சேரியில் இரட்டை இஞ்சின் ஆட்சி நடந்து வருகிறது. ஆனாலும் புதுச்சேரியில் நீண்ட நாள் பிரச்னையாக இருக்கும் விமான நிலைய விரிவாக்கம், சென்னை மகாபலிபுரம் வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் கடலுாருக்கு ரயில் மற்றும் புதுச்சேரி - திண்டிவனம் ரயில் திட்டம், துறைமுகம் துார்வாரும் திட்டம், லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை திறப்பு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்கு நிதி ஆதாரத்தை மத்திய அரசிடம் இருந்து பெற்று வருவார்கள் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால், வாங்கி வரவில்லை. மற்ற மாநிலங்களைப் போன்று இல்லாமல் புதுச்சேரிக்கு ரூ.1,000 கோடி இந்தாண்டு கூடுதலாக சிறப்பு நிதியாக கொடுத்திருந்தால் ரூ.442 கோடி விமானநிலைய விரிவாக்கம், ரூ.142 கோடி ரயில் திட்டம், துறைமுகம் தூர்வார ரூ.24 கோடி, ஸ்மார்ட் சிட்டி ரூ.400 கோடி என, மிகப்பெரிய அளவில் புதுச்சேரி வளர்ச்சி பெற்றிருக்கும். லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலைக்கு ரூ.75 கோடி வழங்கியிருந்தால் அதனை திறந்து நடத்தலாம்.
ரூ.1,000 கோடியில் 20 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பும், புதுச்சேரி மீண்டும் எழுந்து நிற்கும் சூழ்நிலையும் இருந்தது. மூன்று ஆண்டுகளில் 3 கவர்னர்களை பார்த்துவிட்டோம். நிறைய செய்வதாக சொன்னார்கள். ஆனால் எதையுமே செய்யவில்லை. கடந்தாண்டு படித்த அதே கவர்னர் உரையை இப்போது படித்துவிட்டு சென்றுள்ளனர். பட்ஜெட்டும் இதேபோன்று தான் இருக்கும்.
எந்தவொரு சிறப்பு நிதியும் இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளனர். நீர்பாசனம், விவசாயம், கால்நடைக்கு இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கொடுப்பது போன்று புதுச்சேரிக்கு எதுவும் தரவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியா முழுவதும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசு சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரிக்கு ஓரவஞ்சனை செய்யாமல் நிதி கொடுத்து உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.