/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அணிவகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை... உயர்வு; 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க முடிவு
/
அணிவகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை... உயர்வு; 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க முடிவு
அணிவகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை... உயர்வு; 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க முடிவு
அணிவகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை... உயர்வு; 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க முடிவு
ADDED : மார் 03, 2025 05:17 AM
புதுச்சேரி: சுதந்திர தினம், குடியரசு தினம், விடுதலை தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கான செலவின ஊக்க தொகையை, அரசு நீண்டகாலத்தற்கு பிறகு உயர்த்தியுள்ளது.
சுதந்திர தினம், குடியரசு தினம், புதுச்சேரி விடுதலை தினம் ஆகியவை, புதுச்சேரி அரசு சார்பில், விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இதற்கான அணிவகுப்பில் போலீசார், தீயணைப்பு வீரர், ஊர்காவல் படையினர் மட்டுமின்றி, என்.சி.சி., என்.என்.எஸ்., மாணவர்கள் மிடுக்காக அணிவகுக்கின்றனர். இதுதவிர பல்வேறு பள்ளி மாணவர்களின் கண்கவரும் கலாசார கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றது. ஆனால், இவற்றில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கான ஊக்க தொகை, சொற்ப அளவில் கொடுக்கப்பட்டு வந்தது.
முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்துள்ளதால், அணிவகுப்பில் பங்கேற்கும் பள்ளி குழுவினரின் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை, விளையாட்டு இளைஞர் நலத்துறை மூலம், தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு உயர்வு
அணிவகுப்பு கொண்டாட்டத்திற்கு, வாஷிங் அலவன்ஸ், ஒரு மாணவருக்கு 10 ரூபாய் இருந்தது. தற்போது 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான புத்துணர்ச்சி தொகை, ஒரு மாணவருக்கு 40 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீருடை படி, துணி கொள்முதல் செய்ய 500 ரூபாய், அதனை தைப்பதற்கு 700 ரூபாய் என, ஒரு மாணவருக்கு 1,200 ரூபாய் ஊக்க தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஷூ அலவன்ஸ் ரூ.40, பயணப்படி ரூ.40 என உயர்த்தப்பட்டுள்ளது.
சான்றிதழ் அச்சடிக்க, புதுச்சேரி பிராந்தியத்திற்கு 4,500 ரூபாய், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய், வெற்றிக்கோப்பைக்கு 2 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, புதுச்சேரியில் அணிவகுப்பிற்காக 8 நாட்கள் ஒத்திகையில் ஈடுபட 14,000 ரூபாய், காரைக்காலுக்கு 3,500 ரூபாய், மாகி, ஏனாமுக்கு 3000 ரூபாய் செலவின தொகைக்கு அனுமதிக்க உள்ளது. கலாசார நிகழ்ச்சிகளுக்கு 10 நாட்கள் புத்துணர்ச்சி செலவிற்கு தலா 40 ரூபாய் வீதம் 10 நாட்களுக்கு 400 ரூபாய் அனுமதிக்கப்படும். பயணப்படியாக 40 ரூபாய் வீதம் 10 நாட்களுக்கு 400 ரூபாய், ஒரு மாணவர் பெறலாம் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
காஸ்ட்யூம், மேக் அப் செலவிற்கு ஒரு மாணவருக்கு 700 ரூபாய், இசை, நடன ஒருங்கிணைப்பிற்கு ஒரு பள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பேருக்கு பயன்
அணிவகுப்பில் பங்கேற்போருக்கு, வாஷிங் அலவான்ஸ் மூலம் 3,360 மாணவர்களும், புத்துணர்ச்சி செலவினம் மூலம் 3,360 மாணவர்களும், 126 ஆசிரியர்களும் பயனடைவர்.
சீருடைபடி 2,030 மாணவர்களுக்கும், ஷூ அலவான்ஸ் 1,085 மாணவர்களுக்கும் கிடைக்கும். கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்கும் 1,080 மாணவர்களுக்கு பயன் கிடைக்கும்.
அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, நீண்ட காலமாக ஊக்க தொகை உயர்வு அளிக்காத சூழ்நிலையில், இனி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதனை மாற்றி உயர்த்தியமைக்கவும், அரசு கட்டாய உத்தரவிட்டுள்ளது.