ADDED : மார் 22, 2024 05:53 AM

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, சுயேச்சை வேட்பாளர் நேற்று மனு தாக்கல் செய்தார்.
லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் துவங்கியது. முதல்நாளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான நேற்று தட்டாஞ்சாவடி நவசக்தி நகரை சேர்ந்த கூத்தன் என்கிற தெய்வநீதி, 54, சுயேச்சையாக போட்டியிட 12,500 ரூபாய் செலுத்தி மனு தாக்கல் செய்தார். சுயேட்சை வேட்பாளர் என்பதால் அவரை 10 பேர் முன்மொழிந்தனர்.
தெய்வநீதி தன்னுடைய கையிருப்பாக 20 ஆயிரம் ரொக்கப்பணம், 2.50 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் நகை, 5 லட்சம் மதிப்புள்ள நிலம் என, மொத்தம் 7.70 லட்சம் ரூபாய் சொத்து, நகை, பணம் உள்ளதாக கணக்கு காட்டியுள்ளார்.
இன்று 22ம் தேதி முதல் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். வரும் 27ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளுக்கு வேட்பாளரை ஒருவர் முன்மொழிவு செய்யலாம். மற்ற வேட்பாளர்களுக்கு 10 பேர் முன்மொழிவு செய்ய வேண்டும். முன்மொழிவு செய்பவர்கள் புதுச்சேரியில் கட்டாயமாக வாக்காளர்களாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

