/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படகுகளில் வர்ணம் அடிக்கும் பணி தீவிரம்
/
படகுகளில் வர்ணம் அடிக்கும் பணி தீவிரம்
ADDED : மே 15, 2024 11:43 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன் பிடி தடைக்காலத்தையொட்டி, படகுகளில் வர்ணம் அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் கடல்சார் மீன் வளங்களை நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்தும் வகையில், மீன் பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பிரதேச கடல் பகுதியில் கனக செட்டிக்குளம் முதல், மூர்த்திக்குப்பம் - புதுக்குப்பம் வரையும், காரைக்கால் பகுதியில் மண்டபத்துார் முதல் வடக்கு வாஞ்சூர் வரையும், ஏனாம் மீன் பிடிப்பு பகுதியை உள்ளடக்கிய இடங்களில், வரும் ஜூன், 14ம் தேதி வரை, 61 நாட்களுக்கு, மீன்படி தடை அமலில் இருக்கும்.
இதையொட்டி பாரம்பரிய மீன் பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர, அனைத்து வகை படகுகள், குறிப்பாக இழு வலை கொண்டு விசைப்படகில் மீன் பிடிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேங்காய்த்திட்டு உப்பளம் துறைமுகத்தில், பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளை, கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து, வர்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீன் பிடி வலைகளையும் பழுது பார்த்து வருகின்றனர்.