/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாய்களை விஷம் வைத்து கொன்றவர்கள் குறித்து விசாரணை
/
நாய்களை விஷம் வைத்து கொன்றவர்கள் குறித்து விசாரணை
ADDED : மே 09, 2024 09:09 PM

திருக்கனுார்: திருக்கனுாரில் நாய்களுக்கு கோழி இறைச்சியில் விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனுார்- மண்ணாடிப்பட்டு செல்லும் சாலையில் குடியிருப்புகளுக்கு வெளியே லட்சுமி நகர் அமைந்துள்ளது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது வீடுகளில் நாய்களை வளர்த்து வருகின்றனர். அவைகள் இரவு நேரங்களில் வெளிநபர்கள் யாரேனும் அப்பகுதிக்கு வந்தால் சத்தம் போட்டு பாதுகாப்பு அளித்து வந்தன.
இந்நிலையில் அப்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த பத்து நாய்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென மயங்கி விழுந்து இறந்தன.
இதையடுத்து, நாய் இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்ட போது, அங்கு விஷம் தடவப்பட்ட கோழி இறைச்சிகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சவுந்தர்ராஜன் என்பவர் திருக்கனுார் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, நாய்களை விஷம் வைத்து கொன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.