சர்வீஸ் சென்டரில் ரூ.1 லட்சம் ஐபோன், ஏர்போட் திருட்டு
சர்வீஸ் சென்டரில் ரூ.1 லட்சம் ஐபோன், ஏர்போட் திருட்டு
ADDED : ஜூன் 14, 2026 11:31 PM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சர்வீஸ் சென்டரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஐபோன், ஏர்போட் திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, லுார்து நகரை சேர்ந்தவர் அசான் அலி, 32; மணிகூண்டு அருகே மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவர், கடந்த 12ம் தேதி இரவு சர்வீஸ் சென்டரை வழக்கம் போல் மூடிச் சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் முன்பக்க ஷட்டர் கதவில் பூடப்பட்டிருந்த இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அசான் அலி கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சர்வீஸ் செய்ய வந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான ஐபோன், மொபைல் மற்றும் ஏர்போட் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தன. தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
அசான் அலி அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
