சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு போலீஸ் வாகனம் பாதுகாப்பா?
சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு போலீஸ் வாகனம் பாதுகாப்பா?
ADDED : ஜூன் 13, 2026 10:42 PM

புதுச்சேரியில் கடந்தாண்டு இறுதியில் கிளம்பிய போலி மருந்து விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த ராஜா, தன் மீதான சி.பி.ஐ., வழக்குகளை முடக்க, சி.பி.ஐ., அதிகாரிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்த வழக்கில் ராஜாவை, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு தடுப்பு படையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து, ராஜாவை விசாரணை செய்ததில், வழக்கை முடிக்க முதல் கட்டமாக ஒரு கோடி ரூபாயை புதுச்சேரியில் ஏற்பாடு செய்துள்ளார். அந்த பணத்தை, சென்னையில் உள்ள ஹவாலா ஏஜென்டிற்கு தனது காரில் கொண்டு சென்றபோது, புதுச்சேரி எல்லையில் நடந்த சாலை மறியலில் கார் சிக்கிக் கொண்டது.
உடன், ராஜா பணத்தை பாதுகாப்பாக சென்னைக்கு கொண்டு செல்ல புதுச்சேரியை சேர்ந்த அரசியல் பிரமுகரின் உதவியை நாடினார். அந்த பிரமுகர் கூறியதன் பேரில், போலீஸ் ஜீப் பாதுகாப்புடன் பணத்துடன் கார், சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
சட்ட விரோத பண பரிவர்த்தனைக்கு அரசியல் பிரமுகர் கூறியதன் பேரில் போலீஸ் வாகனத்தை பயன்படுத்திய சம்பவம் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவங்கி உள்ளதால், இவ்வழக்கில் அடுத்து சிக்கப்போவது அரசியல் பிரமுகரா அல்லது போலீஸ் அதிகாரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
