சி.வி.சண்முகம் ராஜினாமா முடிவா? ஆதரவாளர்களுடன் ஆலோசனை
சி.வி.சண்முகம் ராஜினாமா முடிவா? ஆதரவாளர்களுடன் ஆலோசனை
ADDED : மே 28, 2026 06:04 PM
–நமது நிருபர்–: அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் அனுப்பிய துாதுக்குழுவை தவிர்த்து விட்டு, அடுத்து எடுக்கும் அரசியல் முடிவு குறித்து முன்னாள் அமைச்சர் சண்முகம் அவரது வீட்டில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்குப்பின் த.வெ.க.,வை ஆதரிப்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றொரு அணியாகவும், அ.தி.மு.க., வில் பிளவு ஏற்பட்டது.
அதையடுத்து, வேலுமணி தரப்பில் இருந்த 4 எம்.எல்.ஏ., க்கள், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்து விட்டனர். இதேபோல் வேலுமணி அணியில் இருந்து வந்த 6 பேர், திடீரென மன்னிப்பு கடிதம் கொடுத்து, பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக வேலுமணி, தங்கமணி, வீரமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள், பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்தித்து சமரமாகி விட்டனர். இதில் தனி அணியாக பிளவு படுவதற்கு முக்கிய துாணாக இருந்து வந்த சி.வி.சண்முகம் பழனிசாமியுடன் செல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில், பழனிசாமி உத்தரவின் பேரில், சண்முகத்தை தங்கள் பக்கம் கொண்டு வருவற்கு, வேலுமணி தரப்பினர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் அமைதியாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சண்முகம் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, முடிவு எடுப்பதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் வரவழைத்தார். இதில் மொத்தமுள்ள 22 ஒன்றிய செயலாளர்களில் 4 ஒன்றிய செயலாளர்களை தவிர மீதமுள்ள ஒன்றிய செயலாளர்கள், அனைத்து நகர செயலாளர்கள் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய சண்முகம், ‘வேலுமணி உள்ளிட்ட அனைவரும் சேர்ந்துதான் தனி அணியாக செயல்படுவது என முடிவு செய்தோம். கடைசியில் என்னை அவர்கள் பலிகடா ஆக்கிவிட்டார்கள். தொடர்ந்து எனக்கு பல ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு ஆதரவு கொடுத்த உங்களின் காலை தொட்டு வணங்குகிறேன். வருங்காலத்தில் நீங்கள் எந்த முடிவையும் சுதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம். அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்’ என்றார்.
இதற்கு கட்சி நிர்வாகிகள் பலர், ‘நீங்கள் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தின் அ.தி.மு.க.,செயலாளராக இருக்க வேண்டும். உங்கள் கீழ்தான் நாங்கள் அரசியல் செய்வாம். வேறு எந்த நிர்வாகியின் கீழ் அரசியல் செய்யமாட்டோம்’ என்றனர்.
இதற்கிடையே, சண்முகம் தேர்தலில் போட்டியிட, நான்தான் ஏ. பார்ம், பி.மார்மில் கையெழுத்து போட்டேன் என பழனிச்சாமி கமென்ட் அடித்து பேசிய வார்த்தைகள் சண்முகத்தை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சண்முகம் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் முடிவிற்கு வந்துவிட்டார் என்றும், மயிலம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, ராஜினாமா செய்யும் முடிவை அறிவிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தபின், சி.வி.சண்முகம், த.வெ.க.,பக்கம் செல்வாரா அல்லது பதவி ராஜினாமாவிற்கு பிறகு எந்த கட்சிக்கும் செல்லாமல் அமைதி காப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.
சண்முகம் கூட்டத்தில் பங்கேற்றவர்
பழனிசாமியிடம் ஐக்கியமானார்
சென்னையில் சண்முகம் வீட்டில் நடந்த மாவட்ட அ.தி.மு.க.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், யார் எந்த முடிவு எடுத்தாலும் நான் தடுக்க மாட்டேன் என்று சண்முகம் தனது ஆதரவாளர்களிடம் கூறினார். கூட்டத்தில் விழுப்புரம் கிழக்கு நகர செயலாளர் ராமதாசும் பங்கேற்றார். கூட்டம் முடிந்த பிறகு, ராமதாஸ் அங்கிருந்து நேராக, கட்சி பொதுச் செயலாளர் பழனிசாமி வீட்டிற்குச் சென்று, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, சண்முகம் அணியிலிருந்து பழனிசாமி அணிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
