ஜிப்மருக்கு லக் ஷயா பிளாட்டினம் சான்றிதழ் இரண்டாம் ஆண்டாக பெற்று அசத்தல்
ஜிப்மருக்கு லக் ஷயா பிளாட்டினம் சான்றிதழ் இரண்டாம் ஆண்டாக பெற்று அசத்தல்
ADDED : ஆக 09, 2026 09:22 PM
புதுச்சேரி: ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு சேவைகளுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் லக் ஷயா திட்டத்தின் கீழ் உயரிய பிளாட்டினம் சான்றிதழ் தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் பிரசவ அறைகள் மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சை கூடங்களில் பாதுகாப்பான நடைமுறைகள், நோயாளி பாதுகாப்பு, தொற்று கட்டுப்பாடு, அவசரகால தயார்நிலை மற்றும் கண்ணியமான பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்ததற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இரு நிலை மதிப்பீட்டு முறையின் அடிப்படையில் வழங்கப்படும் இச்சான்றிதழுக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான மறுமதிப்பீட்டில், ஜிப்மர் மருத்துவமனை 99.5 சதவீதம் மற்றும் 99 சதவீதம் என்ற உயர் மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
தென்னிந்தியாவின் மிக முக்கிய மருத்துவ மையங்களில் ஒன்றாகத் திகழும் ஜிப்மரில், மாதந்தோறும் 800 முதல் 900 பிரசவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான பிராந்திய பரிந்துரை மையமாகச் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி கூறுகையில், தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக லக் ஷயா பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றிருப்பது ஜிப்மருக்கு பெருமை சேர்க்கும் மைல்கல்லாகும்.
இது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய கூட்டு முயற்சிக்கு கிடைத்த சான்றாகும். தாய் மற்றும் சேய்க்கு பாதுகாப்பான, தரமான மருத்துவ சேவைகளை வழங்க ஜிப்மர் தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
