ADDED : மே 03, 2026 06:30 PM

புதுச்சேரி: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, தேர் வீதியுலா நேற்று நடந்தது.
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
கடந்த 1ம் தேதி மதியம் திரவுபதியம்மன் – அர்ஜூனன் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை தேர் வீதியுலா நடந்தது. திரளான மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
முக்கிய நிகழ்வாக, இன்று (4ம் தேதி) காலை 10:00 மணிக்கு படுகளம் நிகழ்ச்சி, ஊரணி பொங்கல், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 5ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 6ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.
