விருத்தாசலம் அருகே ரயில் மோதி 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
விருத்தாசலம் அருகே ரயில் மோதி 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி
ADDED : ஜூன் 15, 2026 05:50 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி, 50க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆடு வளர்ப்போர், கடலுார் மாவட்டங்களுக்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி வருவது வழக்கம். இதற்காக, விவசாயிகளின் விளை நிலங்களில் ‘கிடை’ அமைத்து, ஆடுகளுக்கு மேய்ச்சலும், அதன் மூலம் வருவாயும் ஈட்டி வருகின்றனர்.
அதன்படி, விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் கிராமத்தில், ராமநாதபுரம் ஆடு வளர்ப்போர், கடந்த சில நாட்களுக்கு முன் பட்டி அமைத்து, ஆடுகளை கிடை கட்டி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்ததால், திறந்தவெளியில் கட்டியிருந்த ஆடுகள், கிடையில் இருந்து வெளியேறின.
அவை, விருத்தாசலம் – சேலம் மார்க்கமாக செல்லும் ரயில் பாதையை நள்ளிரவு 2:00 மணியளவில் கடந்தபோது, சென்னையில் இருந்து சேலம் சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆடுகள் மீது மோதியது. இதில், மந்தையில் இருந்து வெளியேறிய 50க்கும் மேற்பட்ட ஆடுகள், ரயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தன. தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீசார் மற்றும் சேலம் இருப்புப்பாதை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். ரயிலில் சிக்கி 50க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
