ADDED : மார் 29, 2024 04:45 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலகத் தாய்மொழி தினம் மற்றும் 'தளிர்' என்ற மாணவர் கையெழுத்துப்பிரதி வெளியீட்டு விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி 'தளிர்' என்ற மாணவர்களின் கையெழுத்துப்பிரதி இதழை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். 'தளிர்' என்ற இதழ் மாணவர்களின் கையெழுத்தில் அமைந்த கவிதைகள், கட்டுரைகள், ஓவியம், மருத்துவ குறிப்புகள், பொது அறிவு தகவல்கள், தாய்மொழி, தமிழ்நாடு, இந்தியா, உலகம் குறித்த பல்சுவை தகவல்களைக் கொண்ட கையெழுத்துப்பிரதி ஆகும்.
உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் கவியரங்கம், மேடைப்பேச்சு, குழுவிவாதம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவியம், மீம்ஸ், குழுவிவாதம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் வனிதா நோக்கவுரை ஆற்றினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் வனிதா, ராஜேந்திரன், புனிதவதி ஆகியோர் செய்திருந்தனர்.