/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் நேரடியாக களம் இறங்கும் நகராட்சிகள்
/
போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் நேரடியாக களம் இறங்கும் நகராட்சிகள்
போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் நேரடியாக களம் இறங்கும் நகராட்சிகள்
போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் நேரடியாக களம் இறங்கும் நகராட்சிகள்
ADDED : ஏப் 23, 2024 11:48 PM

புதுச்சேரி : புதுச்சேரியில் முக்கிய போக்குவரத்து சிக்னல்களில், நகராட்சி சார்பில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் அரசு சார்பில் போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க, சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக, சுகாதார ஊழியர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள், கலெக்டர் குலோத்துங்கனிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜிடம், சுகாதார ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் முனுசாமி, பொதுச் செயலாளர் ஜவகர், பொருளாளர் மணிவாணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
பின், சம்மேளன நிர்வாகிகள் கூறியதாவது:
கலெக்டரிடம் பசுமை பந்தல் குறித்து வலியுறுத்தியபோது, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்களை சந்தித்து பேச அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், உழவர்கரை நகராட்சி ஆணையரிடம் பேசியபோது, நகராட்சி சார்பில் இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தி சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உள்ளாட்சித்துறை இயக்குநரும், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்களை அழைத்து பேசி, நடவடிக்கையை துரிதப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

