/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் ஏட்டு மீது கொலைவெறி தாக்குதல்; புதுச்சேரியில் ரவுடி கும்பல் அட்டூழியம் இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை

ADDED : ஆக 08, 2024 12:50 AM

வில்லியனுார் : வில்லியனுார் அருகே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பலை சேர்ந்த இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையில் பூக்கடை நடத்தி வருபவர் ரத்தினவேல். இவரை கடந்த மாதம் 31ம் தேதி அதே பகுதியை சேர்ந்த நவீன், வில்லியனுார் அம்மா நகர் சசிக்குமார் மகன் சதீஷ்,22; உள்ளிட்ட கும்பல் கத்தியால் வெட்டியது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சதீஷை தேடிவந்தனர்.
சதீஷை கஞ்சா வழக்கில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு வசந்தகுமார் ஏற்கனவே கைது செய்தவர் என்பதால் அவரை தொடர்பு கொண்ட முத்தியால்பேட்டை போலீசார், சதீஷ் நடமாட்டத்தை கண்காணித்து தகவல் தருமாறு கூறினர்.
இந்நிலையில் நேற்று காலை 9:30 மணிக்கு தனது குழந்தைகளை பள்ளியில் இறக்கி விட்டு அம்மா நகருக்கு சென்ற வசந்தகுமார், அங்கு வீட்டில் இருந்த சதீஷை பிடித்து கைவிலங்கு மாட்டி, முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதற்குள், அருகில் இருந்த சதீஷின் சகோதரர் பிரதீப்,19; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து ஏட்டு வசந்தகுமாரை குக்கர் மற்றும் கற்களை கொண்டு முகம் மற்றும் தலையில் கொலை வெறியுடன் தாக்கினர். அதில் படுகாயமடைந்த வசந்தகுமார் மயங்கி விழுந்ததும் சதீஷ் உள்ளிட்ட மூவரும் தப்பி சென்றனர்.
படுகாயமடைந்த ஏட்டு வசந்தகுமாரை அப்பகுதி பெண்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். தலையில் ஏற்பட்ட காயத்தில் ரத்தப் போக்கு நிற்காததால், அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, பிரதீப் மற்றும் 17 வயது சிறுவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான சதீஷை தேடிவருகின்றனர்.