ADDED : மே 30, 2026 10:30 PM

புதுச்சேரி: டில்லி சென்ற அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.
புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., சார்பில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட்ட நமச்சிவாயம் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து கடந்த 13ம் தேதி முதல்வர் ரங்கசாமியுடன் அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து கடந்த வாரம், டில்லி சென்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்காததால், புதுச்சேரி திரும்பினார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று முன்தினம் மாலை டில்லி புறப்பட்டு சென்றார். அன்று இரவு, புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசினார்.
தொடர்ந்து நேற்று மதியம் 12:40 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். பின், சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், புதுச்சேரியில் நிலவிவரும் அரசியல் சூழல் குறித்தும், மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, புதுச்சேரி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து தர தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்.
