ADDED : மே 05, 2026 06:00 PM
புதுச்சேரி: புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் நிலவி வந்த உள்துறை அமைச்சர் சென்டிமென்டை தகர்த்து இத்தேர்தலில் நமச்சிவாயம் வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில், உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர்கள் அடுத்த தேர்தலில் தோல்வி அடைவார்கள். அத்துடன் அவர்களின் அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும் என்பது பெரும் ‘சென்டிமென்டாக’ இருந்து வந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த 1991–96ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த கண்ணன், அதன்பின் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இதேபோல், 2006–2011ம் ஆண்டு வரை உள்துறை அமைச்சராக இருந்த வல்சராஜ், அதன்பின் நடந்த தேர்தல்களில் போட்டியிடவே இல்லை.
இந்த நிலையில் கடந்த 2021 தேர்தலில் பா.ஜ., சார்பில் வெற்றி பெற்ற நமச்சிவாயம் உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் மீண்டும் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார்.
உடன் அரசியல் நோக்கர்கள் ‘உள்துறை அமைச்சர்’ சென்டிமென்டை கூறி, அவர் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்றனர்.
ஆனால், நமச்சிவாயம் தனக்கெதிரான சென்டிமென்டை உடைத்தெரிந்ததோடு மட்டுமன்றி, கடந்த தேர்தலைவிட 3,360 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, அதே மண்ணாடிப்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
