ADDED : பிப் 22, 2025 04:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்துறை மற்றும் தேசிய சிறுதொழில் கழகம் சார்பில், சிறுகுறு தொழில் குழு (எம்.எஸ்.எம்.இ.) உருவாக்கியுள்ள 'ஒப்பன் நெட்வெர்க் டிஜிட்டல் காமர்ஸ் ஆன்போர்டிங்' திட்டம் குறித்த கருத்தரங்கு சற்குரு ஓட்டலில் நடந்தது.
சிறு தொழில் செய்வோர் உருவாக்கும் பொருட்கள், பிரபலமான ஆன்லைன் வர்த்தக தளத்தில் கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்கின்றனர். இதற்கு மாற்றாக பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முனைவோர் மற்றும் அதனை வாங்கும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் 'ஒப்பன் நெட்வெர்க் டிஜிட்டல் காமர்ஸ் ஆன்போர்டிங்' உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கருத்தரங்கை தொழில்துறை இயக்குநர் ருத்ரகவுடு துவக்கி வைத்து, பேசினார். தேசிய சிறுதொழில் கழக கிளை மேலாளர் கார்த்திகேயன், தேசிய சிறுதொழில் கழகத்தின் சேவைகள், சிறுதொழில் செய்வோர்களின் பயன்களை விளக்கி கூறினார். சிறுகுறு தொழில் குழு ரோகித், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் காமர்ஸ் சேவையின் பயன்கள் குறித்து தொழில் முனைவோருக்கு விளக்கி கூறினார்.
லக்கோ உத்யேக் பாரத் செயலாளர் விஸ்வேஸ்வரன், சிறுகுறு தொழில் பரிசோதனை மைய உதவி இயக்குநர் தர்மசெல்வன் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

