புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2026 08:50 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ள மத்திய அரசை கண்டித்து, நேரு எம்.எல்.ஏ., தலைமையில், பொது நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வும், மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான நேரு எம்.எல்.ஏ., தலைமையில், பொதுநல அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தி ஓராண்டு ஆகியும், மாநில அந்தஸ்து கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ள மத்திய அரசை கண்டித்து, மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர் நேரு எம்.எல்.ஏ., தலைமையில், புதுச்சேரி அண்ணா சிலை சந்திப்பு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், நேரு எம்.எல்.ஏ., பேசுகையில், ‘மாநில அந்தஸ்து தகுதி இல்லாததால், புதுச்சேரி அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கால தாமதமாகவும் சில திட்டங்கள் கிடைக்கப் பெறாமலும், மத்திய அரசு மூலம் நியாயமாக கிடைக்க வேண்டிய எந்த ஒரு சலுகைகளும் கிடைக்காமல் உள்ளது. இதனால், புதுச்சேரியின் வளர்ச்சி பின்னுக்கு தள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாநில அந்தஸ்து இல்லாமல் புதுச்சேரி மத்திய அரசின் நிதிக்குழுவிலும் பங்கு பெற முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
