/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தும் விழா
/
புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தும் விழா
ADDED : ஜூலை 02, 2024 05:03 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தும் விழா நடந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை மாற்றி மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்தது.
புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தும் விழா கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி குற்றவியல் சட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு பேசினார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சட்டத்தை பின்பற்றி வந்தோம். தற்போது மக்கள் பிரதிநிதிகள் மூலம் நம் நாட்டிற்கு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தேவையான சட்டங்களை மத்திய அரசு சட்டமாக்கி கொடுத்துள்ளது.
அந்த காலத்தில் சைபர் குற்றங்கள் இல்லை. இன்று புதிய புதிய குற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனை தடுக்க சட்டங்கள் இதுவரை இல்லை. சைபர் குற்றங்களுக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். வழக்கு விசாரணை கால தாமத்தை தவிர்க்கவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு குற்றம் செய்தவர் எப்பொழுது வேண்டுமானலும் அபராதம் கட்டி வெளியே வந்துவிடலாம் என எண்ணம் உள்ளது. இந்த எண்ணத்தை அகற்ற 33 குற்றங்களுக்கு தண்டனை உயர்த்தப்பட்டுள்ளது' என்றார்.
நிகழ்ச்சியில் ரமேஷ் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, சீனியர் எஸ்.பி.,கள் நாரா சைதன்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் நன்றி கூறினார்.