/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய சாலைகள் சேதப்படுத்தும் அவலம் ஒருங்கிணைப்பு இல்லாததால் வரிப்பணம் பாழ்
/
புதிய சாலைகள் சேதப்படுத்தும் அவலம் ஒருங்கிணைப்பு இல்லாததால் வரிப்பணம் பாழ்
புதிய சாலைகள் சேதப்படுத்தும் அவலம் ஒருங்கிணைப்பு இல்லாததால் வரிப்பணம் பாழ்
புதிய சாலைகள் சேதப்படுத்தும் அவலம் ஒருங்கிணைப்பு இல்லாததால் வரிப்பணம் பாழ்
ADDED : ஆக 29, 2024 07:09 AM

புதுச்சேரி: அரசு துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் புதிதாக போடப்படும் சாலைகளை மீண்டும், மீண்டும் பள்ளம் தோண்டும் அவலம் தொடர்கிறது.
புதுச்சேரி துறைமுக சாலையில் இருந்த பாதாளசாக்கடை மேன்ேஹால்களை காணோம் என, பொதுப்பணித்துறை கழிவு நீர் கோட்ட ஊழியர்கள் மெட்டல் டிடெக்டர்களுடன் தினமும் தேடி வருகின்றனர். ஆனால், இன்னமும் மேன்ேஹால்களைன் கண்டுபிடித்தப் பாடில்லை.
இந்த சாலையை போட்டது பொதுப்பணித் துறையின் மத்திய கோட்டம். சாலையில் பாதாள சாக்கடை மேன்ேஹால்களை தேடி கொண்டிருப்பதும் அதே பொதுப்பணித் துறையின் மற்றொரு பிரிவான கழிவு நீர் கோட்டம். ஒரே துறைக்குள்ளாகவே இப்படி ஒருங்கிணைப்பு இல்லாததால், புதிதாக போடப்பட்ட சாலை இன்னும் சில நாட்களில் சேதப்படுத்தும் நிலையில் உள்ளது.
இப்படி தான், புதிதாக போடப்படும் சாலைகள் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணங்களுடன் குதறி போடப்பட்டு வருகின்றது. இதனால், மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது.
புதுச்சேரி அரசில் 54 துறைகள் உள்ளன. பொதுமக்களின் சேவையை இலக்காக கொண்டு பணியாற்றி வரும் அரசு துறைகள் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. ஆனால் துறைகளுக்குள் போதிய ஒருங்கிணைப்பு இல்லை. உதாரணமாக, பொதுப்பணித் துறை சாலை போட்டதும், மறுநாளே கேபிள், தண்ணீர் குழாய் புதைக்க பள்ளம் தோண்ட போகிறோம் என காரணத்தை கூறி கொண்டு வந்து விடுகின்றனர். அப்படி தோண்டப்படும் பள்ளம் சரியாக மூடுவதும் இல்லை. இதனால், சாலைகள் சில நாட்களிலேயே குண்டு குழியுமாக மோசமாகி விடுகின்றது.
அந்த வரிசையில் சாலையை மோசமாக்க, இப்போது பாதாள சாக்கடைக்காக போடப்பட்ட மே ன்ேஹால் சேர்ந்துள்ளது.
நகர பகுதிகளில் சாலையில் நடுவில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாதாளக்சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சரி செய்ய மேன் ேஹால் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், புதிதாக ரோடு போடும் போது, மேன்ேஹால் இருக்கும் இடத்தை அடையாளமிடாமல், தார் போட்டு மூடிவிடுகின்றனர்.
அடுத்து சில நாட்களில் பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதும், அந்த இடத்தில் சாலையை குதறி எடுத்து அலங்கோலமாக போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அடுத்த சில நாட்களில் குதறிபோடப்பட்ட சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமாகிவிடும்.
புதிய சாலை போடும்போது அரசு துறைகள் அனைத்து ஒருங்கிணைந்து செயல்பட்டால், ரோடுகள் சேதமாவது தவிர்க்கப்படும். அரசுக்கும் பல கோடி நிதி மிச்சமாகும்.