/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 கிராம் நகைக்காக மூதாட்டி கொலை: இருவர் கைது
/
3 கிராம் நகைக்காக மூதாட்டி கொலை: இருவர் கைது
ADDED : மே 28, 2024 04:55 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் சாரங்கபாணி மனைவி லட்சுமி,75; கணவரை இழந்து, தனியாக வசித்து வந்த லட்சுமி, கடந்த 24ம் தேதி காலை தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். துாக்கத்தில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து அவரது மகள் இந்திராணி அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் மேலிருப்பு- கீழிருப்பு ரோட்டில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் பெரியகாட்டுப்பாளையம் தெற்கு தெரு கிருஷ்ணமூர்த்தி மகன் கிருஷ்ணகுமார்,20; கீழிருப்பு தெற்கு தெரு தண்டபாணி மகன் அய்யப்பன்,27; என்பதும், இருவரும் குடிபோதையில் கடந்த 23ம் தேதி இரவு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மூதாட்டி லட்சுமியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அவர் காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க தோட்டை திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார், மூதாட்டி இறப்பு வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து கிருஷ்ணகுமார், அய்யப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.