/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜூன் 16ல் ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு... எழுத்து தேர்வு; எஸ்.ஐ., பணியிடத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்
/
ஜூன் 16ல் ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு... எழுத்து தேர்வு; எஸ்.ஐ., பணியிடத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்
ஜூன் 16ல் ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு... எழுத்து தேர்வு; எஸ்.ஐ., பணியிடத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்
ஜூன் 16ல் ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு... எழுத்து தேர்வு; எஸ்.ஐ., பணியிடத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : மே 02, 2024 12:33 AM
புதுச்சேரி, : ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு ஜூன் 16ம் தேதி எழுத்து தேர்வு நடத்த போலீஸ் தலைமையகம் தயாராகி வருகிறது.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள கவுரவ பதவியான ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் நிரப்பப்படும் என, அரசு அறிவித்தது. முதற்கட்டமாக காலியாக உள்ள 420 ஆண், 80 பெண் ஊர்காவல் படை வீரர்கள் தேர்வு செய்ய கடந்தாண்டு அக்., மாதம் அறிவிப்பு வெளியிட்டு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டன. ஆண்கள் 15,697 பேரும், பெண்கள் 4,492 பேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்தவர்களுக்கு உடற்தகுதி பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. ஆண்களுக்கு நடந்த உடற்தகுதி தேர்வில் 3,034 பேர், பெண்களுக்கான உடற்தகுதி தேர்வில் 1,195 பேர் என மொத்தம் 4,229 பேர் எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றனர். ஆனால், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஊர்க்காவல் படை வீரர் பணிக்கு எழுத்து தேர்வு நடத்தப்படவில்லை.லோக்சபா தேர்தல் ஓட்டு பதிவு முடிந்துள்ள சூழ்நிலையில்,டி.ஜி.பி.,உத்தரவின்பேரில் ஊர்காவல்படை வீரர்களுக்கான எழுத்து தேர்வு நடத்த போலீஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. ஜூன் 16ம் தேதி இந்த எழுத்து தேர்வு நடத்த திட்டமிட்டு,பணிகளை வேகப்படுத்தி வருகின்றது.
கேள்விகள் எப்படி
ஊர்க்காவல் படை வீரர் எழுத்து தேர்வுக்கு பத்தாம் வகுப்பு தரத்தில் கேள்விகள் 100 மதிப்பெண்ணிற்கு கேட்கப்படும்.
கணிதம், பொது அறிவியல் -25, வரலாறு, புவியியல்-25, பொது அறிவு, நாட்டு நடப்பு-50 மதிப்பெண்கள் கேள்விகள் கேட்கப்பட உள்ளது. எழுத்து தேர்வினை ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிராந்திய மொழிகளிலும் எழுதலாம். தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் கழிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை தந்து இருந்தாலும், அது தவறான பதிலாக கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து தேர்வு மையங்களை போலீஸ் இறுதி செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சப் இன்ஸ்பெக்டர் பணி
ஊர்க்காவல் படை வீரர் அறிவிப்புக்கு முன்னதாக காவல் துறையில் காலியாக உள்ள 60 சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பங்கள் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டன. போட்டி போட்டு இளைஞர்கள் விண்ணப்பித்தனர். இப்பணியிடம் பொது-25, இ.டபுள்யூ.எஸ்.,-6, ஓ.பி.சி.,-19, எஸ்.சி.-9, எஸ்.டி.,-1 என்ற அடிப்படையில் நிரப்பப்படும்.
பெண்களுக்கு 33 சதவீதம் உள்ஒதுக்கீடு தரப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எஸ்.ஐ., பணியிடம் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக அனைத்து பணியிடங்களுக்கும் 2 ஆண்டு வயது தளர்வினை அரசு அறிவித்தது. சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு இந்த வயது தளர்வு தொடர்பாக நிர்வாக சீர்த்திருத்த துறையின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக எஸ்.ஐ., தேர்வு பணியை துவங்க வேண்டும் என டி.ஜி.பி., சீனிவாஸ் உத்தரவிட்டுள்ளார். எனவே சப் இன்ஸ்பெக்டர் பணி தேர்வுக்கான பணிகளும் வேலைகளும் விரைவில் துவங்க உள்ளது. மேலும், இரண்டு ஆண்டு வயது தளர்வு கிடைக்கும். மீண்டும் ஆன்லைனில் அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறவும் போலீஸ் தலைமையகம் முடிவு செய்து பணிகளை வேகப்படுத்தி வருகிறது.

